சமீபத்தில் புதிய நட்பொன்று கிடைத்தது. அவன் அதிரூபனோ, பரிசுத்தவனோ இல்லை. ஆனால் நல்ல கலைஞன். இன்னதென்று புரியாத கவனஈர்ப்பு அவரிடம் ஏற்படுவதை மட்டும் தடுக்க முடியவில்லை. ஏற்கனவே ஒரு உறவில் பிணைக்கப்பட்டவள் தான். ஆனாலும் எனக்கு என்ன நிகழ்கிறது, ஏன் நிகழ்கிறது என்ற பெருங்குழப்பத்தில் உலன்றுகொண்டிருந்தேன்.

இந்நிலையில் தான் தற்செயலாக பாடலை கடந்து செல்கையில் அதன் வரிகள் என்னை பிடித்து நிறுத்தியது. பால்யகால சிநேகிதியொருத்தி என் மனநிலையிலிருந்து என் சார்பாக பாடுவதாக அப்பாடல் வரி இருப்பதை உணர்ந்தேன். ஆங்கிலத்தில் அறைகுறையான நான் அதனை மொழிபெயர்க்க முயற்சித்தேன். ( அதன் ஆங்கில வரிகள் இங்கே)
அது இவ்வாறு வந்தது.

வழக்கத்திற்கு மாறான விதத்தில் ஒருநாள் உன் அருகாமை தேவைப்பட்டது.
வழக்கத்திற்கு மாறான விதத்தில் என் நண்பனானாய்.
வெறும் ஒருநாளே இந்நட்பு நீடித்திருக்கலாம் அல்லது
ஒரு மணிநேரத்தோடு முடிந்திருக்கலாம்
ஆனாலும் நிரந்தரமாக முடிந்துபோவதில்லை.
வழக்கத்திற்கு மாறான விதத்தில்
உன்னை நேசிப்பதாக உணர்கிறேன்.
வழக்கத்திற்கு மாறான விதத்தில்
அழுது தீர்க்க விரும்புகிறேன்.
ஏதோவொன்று என்னுள் தளர்வடையச் செய்கிறது.
ஏதோவொன்று என்னுள் சரணடைகிறது.
இதற்கெல்லாம் நீயே காரணம்.
நீயே இதற்கெல்லாம் காரணமானபோதும்
என்னுள் என்ன செய்துவிட்டாய் என்பதையே நீ உணரவில்லை.
அதற்கான எந்த தடயமும் உன்னிடமில்லை.
என் அவஸ்தைகள் உனக்கு புரியாது.
உன்னை நேர்கொண்டு பார்ப்பதே
பேசவும் கூடாதபடி அச்சமூட்டுகிறது.
முற்றிலும் வழக்கத்திற்கு மாறான விதத்தில்
என்னையே உனக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.
சில சமயங்களில் உன்னருகில் நிற்கவும் முடிவதில்லை
ஆனாலும் உன்னைவிட்டு நீங்க மாட்டேன்.
முதல்முறை சந்தித்த அக்கணம் முதல் என்வாழ்க்கையில்
அதிமுக்கியமானவனானாய்.
என் ஆன்மாவை தீண்டிய பிறகு எப்படி உனை மறக்கக்கூடும்.
மிக முற்றிலும் வழக்கத்திற்கு மாறான விதத்தில்
நீயே என்னை முழுமையாக்கினாய்...